3.6.16

வல்லூறு செய்வோர்க்கு வல்லூறும் செய்யும் வல்ல மழை.

மச்சக் கருவிழிகள்  
மஞ்சள் கண்களில் 
மருண்டு மின்ன   
குறுவாள் விரல்கள்
பச்சை இளங்கிளை
மிகப் பற்றி நிற்க
குதறுங் கூரலகில்
மழைக் கொடுக்கு
மிடுக்கு காட்டி
வானில் வட்டமிட்டு
வல் ஊறு செய்யும்
வில்லேந்திரனை
வல்லூறு செய்தது
வல்ல மழை.

- சரவணன். 

கனத்து கரித்து வீசுகிறது காற்று .

நீளமான சிறகுகளையுடைய 
அல்பட்ரோஸ் பறவையொன்று 
அழகிய மணி பல்லவத் தீவின் 
தீவ திலகையைப் போல
கடல் வெளியை நோட்டமிட்டபடி
ஏகாந்தமாய் பறந்து கொண்டிருந்தது.
அந்தப் பெரும்பறவையின்
வலிய கருஞ்சாம்பல் சிறகுகள்
மீதேறிய என் வேட்கை மிகுந்த
கண்கள் அருகிலிருந்த காட்டுக்குள்
இரலையைப் போலத் துள்ளிக்
குதித்தோடி ஒரு நீண்ட
ஒற்றைப் பாய்ச்சலில்
இருளுக்குள் புகுந்து மறைந்தது.
அப்போது திசையறியாப் பேரலைகள்
எற்றிக் குதித்து ஆர்த்தெழ
வானத்து மையத்தில்
ஏதுஞ் சலனமற்று
மிதக்கத் தொடங்கியது
ஒரு பெருஞ்சுடர் வடிவம்.
வேட்கை தொலைத்த மனம்
வேட்டைச் செந்நாயாய் மாறி
ஊளையிட கனத்து கரித்து
வீசத் தொடங்கியது காற்று.

- சரவணன். 

வெயிலில் பூக்கும் ஆதி முத்தத்தையொத்த கானல் முத்தங்கள்.

உலகின் ஆதி முத்தத்தை  
அவனும் அவளும் 
நிலத்தின் பேராழத்தில்
பல அடுக்குகளினூடாக
பாயும்  பெருநதியில்
மலராக்கி மிதக்க விட்டிருந்தனர்.

ஆதி முத்தம்
செவ்வரியோடும்
ஒரு மஞ்சள் மலர்.
அம் முத்த மலரின்
மென் மடலிதழ்களில் 
ஆயிரம் சூரியன்களின்
வெளிச்சம் எப்பொழுதும்
பரவிப் படர்ந்திருக்கும்.

அடர் வண்ண
அதன் மகரந்தமணிகளில்
கொப்பளித்துக் கொண்டே
இருக்கும் மோகத் தேன்
வழிந்து கால நதியில்
பெரும் மாயச் சுழல்களை  
தோற்றுவித்துக்
கொண்டேயிருக்கும்.

சுழலீர்ப்பில்
பெருமழைக் காலத்து
மேகங்கள் தம் கூடுடைத்து 
மழைப் பட்டாம் பூச்சிகளாய்
நிலம் புகுந்து பேராழம் பறந்து
மிதக்கும் ஆதி முத்தத்தில்
தேனுறுஞ்ச நில அதிர்வுகளை
உண்டாக்கி நதி மேலலையும்.

அக்கணங்களில்
பால் வீதிகளிலும்
பேரண்ட  வெளிகளிலும்
மஞ்சள் பூவின் தழல் வெப்பம்
மகிழ் காமத்தைப் போல
மிளிர்ந்து தகித்து கடுங் கோடையை
உண்டாக்கி எரிய விட்டிருக்கும். 

எரியுங் கோடையில்
எழும் கானல் நதியில்
அவனும் அவளும்
புனலாடிக் களியிலாழ   
வெயிலில் பூக்கும்
ஆதி முத்தத்தையொத்த
கானல் முத்தங்கள்.

- சரவணன். 

காமனை எழிற் தேவனை தொழுவோமையா!

மாசிப் பிறை சூடி 
நின்றானை 
மோகச் சிறையேக 
வந்தானையா!
கறுத்த வேள் 
வந்தானையா!
செங்கரும்பு 
வில்லொடு 
வந்தானையா! 
ஐந்து மலர்க் 
கணைகளோடு 
வந்தானையா! 
காமன் 
ரதிமாரன் 
வந்தானையா! 
விரிந்த தாமரை 
கணை கொண்டு 
ஏறுதோள் அழகன்  
திருமார்பில் 
களி வேட்கை 
சுரக்கச் செய்து 
சுந்தரன் மதி 
சுழன்றாடச் 
செய்தானையா! 
குழகன் 
கொவ்வையிதழ் 
நோக்கி 
கொத்தாய் 
கொய்த அசோகம் 
கணை பூட்டி   
வசந்தன் 
நின்றானையா!
வல்லானை 
தன் வசமிழக்கச் 
செய்தானையா!
கூர் முல்லைப் பூ 
தொடுத்து மகரன், 
ஏகன் எழிலன் 
கண் நோக்கி 
நின்றானையா!
பித்தனைப் 
பித்தேறச் 
செய்தானையா!  
வண்டு மொய்க்கும்
மாம்பூ கணை பூட்டி 
விரிசடை ஒளியன் 
நுதல் விழி தாக்க 
பூவாளி கொண்டு 
தீவாளி
தெறித்தானையா!
காமர் மன்னன் 
காதல்
விதைத்தானையா!
உன்மத்தமாகி நின்ற  
சித்தர் தலைவனை 
மதனன்
சித்தஞ் சிதறச் 
செய்தானையா! 
நீலோற்பவம் 
எய்து முன்னர் 
நீலகண்டன்
விழித்துக் 
கொண்டானையா!
சமரில் காமனைத் 
தகனம் செய்தானையா!
எரித்தும் உருவிலியாய் 
சீவன் செழிக்கச் 
செய்வானையா!  
என்றும் நீலத் தழல் 
பூத்த நெருப்பிலவன்
தெரிவானையா!
காமனை வெல்லல் 
கடவுளுக்கும்
எளிதில்லையையா !
கரங் கூப்பி 
காமனை 
எழிற் தேவனை 
தொழுவோமையா! 

-சரவணன்.

வேலனெழில் அவன் காதலந் தோழி கால் நனைத்துப் பெருகக் காண்.

அனல்
விழியேறிச் சிவக்க 
கனல்
முகமேறித் தெறிக்க   
குழல்
குதித்தாடிப் பறக்க
காந்தள்
மார்பாடி மணக்க
துள்ளும்
வேலொடு வெறியாடி
கொற்றவைச் சுனையில்
புனலாடி
எழுந்து வரும்
வேலனெழில்
வடிவம்
கண்டவர் கடந்தவர்
விழி பருகி வழிய
நதியாகப்
பெருக்கெடுத்து
பொன் செருந்தி சூடிய 
அவன் காதலந் தோழி
கால் நனைத்து
கடலாகிப் 
பெருகக் காண். 

-சரவணன். 

வெறியாடல் காண வந்த மழை மேகங்கள் குறித்து அகவன் மகள் கூறக் கேளாய்!

நீலம் பூத்துக் கிடந்த  
அணங்குடை நெடுவரையில் 
பிளிறும் வேழத்தின் 
பெருங் குரலெடுத்து
கூட்டங் கூட்டமாய் 
நடனமாடித் திரிந்தன 
நறவமுறுஞ்சிகள். 
தேவராட்டிகளும் 
தேவராளன்களும்  
முது மொழியில் 
மறை மொழி ஓத
குறிஞ்சிப்பூ சூடி 
வெறியேறி வரும் 
வேலன் காண   
தண்கா அதிர 
மின்னிச் சீறி  
மழை வேல் ஊன்றி 
வந்தன மேகங்கள்
என அகவன் மகள் 
கூறக் கேளாய்!

- சரவணன்.