26.12.12

தேன் நாறும் பச்சை வனம்.

பசுந்தைலப் புல் வெளியில்
பொன் தும்பிகள் பறக்கும்.
மெல்லுடலி மென் புழுக்கள்
மண் புரண்டு விளையாடும்.
களி கொண்டு காட்டுச்சேவல்
காடெங்கும்  திரிந்தோடும்.
வான் மின்னல் போல் நெளிந்து
அரவம் மின்னிச் சீறி மறையும்.
சிறு சிலந்தி வலை பின்னி
இரை வேண்டித் தவமிருக்கும்.
மகிழ் மான்கள் இணையோடு
கூடிக் கொம்புரசி மகிழும்.
புனலாடிப் பிளிறிப் பெருநதியில்
காமக் களிறுகள் பிடியோடு குலவும்.
மழைக் குளித்த பிச்சிப் பூ
மணத்தோடு பூத்திருக்கும்.
கூதல் குளிரில் வண்டாடிப்பாடி
தேன் நாறும் பச்சை வனம்.

1 comment:

பால கணேஷ் said...

நறுமணத் தமிழை நுகர்ந்து சுவைத்தேன். அருமை ஐயா.