17.5.14

மஞ்ச நெறத்தழகி மதிய தொலச்சுப்புட்டேன்.

நெறஞ்ச வானத்துல
நெலாப் பூ பூத்திருக்கு!
கரிசக் காடெல்லாம்
ஆவாரம் பூத்திருக்கு!
அடிக் கறுப்புக் கண்ணழகி
மஞ்ச நெறத்தழகி
மதிய தொலச்சுப்புட்டேன் - என்
மனசள்ளிப் போற புள்ள!

கொப்பேரிக் காத்தடிக்க
குளமெல்லாம் அலையடிக்க
ஓரப் பார்வை பாத்துபுட்ட 
ஒலகத்த மறந்துபுட்டேன் 
சுளுக்கி சுளுக்கி நீ சிரிச்ச
சிரிப்பெல்லாம் நெஞ்சுக்குள்ள
நாத்தாகி வெளஞ்சு
நெல் வாசம் வீசுதடி!

ரெட்ட மூக்குத்தில ஒன்ன
விட்டெறிஞ்ச ! விட்டெறிஞ்ச
மூக்குத்தி வானத்துல சூரியனாம்!
ரெட்ட கனகக் குழை காதோரம்
பூத்திருக்க அதிலொன்னு
குழலோரம் மறஞ்சிருக்க
மிச்ச ஒன்னு மின்னிடுமாம்
யாமத்துல சந்திரனாம்!

கண்டாங்கிச் சேல கட்டி
காக்கொலுசு பேசி வர
ஒதட்டோரக் கருப்பு மச்சம் 
காந்தமா இழுக்குதடி!
இம தெறந்து நீ பாத்தா
இந்தப் பதினாலு லோகத்துக்கும் 
உன் கண் வெளிச்சம் பாயுமடி - கங்குல்
பகலெல்லாம் காணாமல் போகுமடி!

அந்தி செவந்து ஆறேல்லாங் கலந்தோட 
கள்ளி உன் கை கோத்து காதலோட 
நின்னப்ப கால் நனச்ச தண்ணி
சில்லுனு சிரசேற செலயாத்தான் ஆனோமே!
சித்தஞ் சீவனேற மூச்செல்லாம் வேகுறப்ப
உள்ளங்கெரங்க ஒரு முத்தங் கொடுத்து
உசுரோட கொன்னுப்புட்ட! என்ன
உசுரோட கொன்னுப்புட்ட!

No comments: