8.2.13

செப்டம்பர் புரட்சிக்கு நன்றி சொல்வோம்.

செப்டம்பர் புரட்சியின் போது
உலகம் இவ்வாறு இருக்கவில்லை.
மக்கள் போராடத் துவங்கி இருந்தனர்
அரச பயங்கரவாதத்தின் கட்டுகள்
அவிழ்த்து விடப்பட்டிருந்தன.
அறவழியில் கடற்புறத்து மக்கள்
போராடத் துவங்கியிருந்த காலமது.
அரசாங்கத்தின் ஆயுதச் சாலையில்
துப்பாக்கி ரவைகளின் உற்பத்தியை
அதிகப்படுத்துமாறு அவசரச் செய்தி
சுற்றறிக்கையாக வந்திருந்தது.
லத்திகளுக்கு ஈயம் காய்ச்சி ஊத்தப்பட்டது.
முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு
மாளிகைக் கட்டுப்பாட்டு அறை தகவல் அனுப்பி இருந்தது.
நகர் காவல் துறைக்கு துப்பாக்கிப் பயிற்சியளிக்க
பேரணிகளுக்கும் மக்களின் முச்சந்தி கூட்டங்களுக்கும்
காவல் தலைவரின் அனுமதி உடனடியாகக் கிடைத்தது.
அணு உலைகளை நிறுவி ஆதி மக்களை அழிக்கத்
திட்டம் தீட்டி செயல்படத் தொடங்கியிருந்தது அரசு.
பேரண்டங் காக்கவும் இயற்க்கைக்கு ஆதரவாகவும்
ஆற்றங்கரை மக்களும் மலை மக்களும் கடல் மக்களும்
சினங்கொண்டு அலைகடலென வெகுண்டுத் திரண்டெழ
அவர்களின் குரல்களுக்குள் காற்று மிக வேகமாக
மூச்சுக் குழாய் மூலம் உள் நுழைந்து புரட்சி என்ற வார்த்தையை
எல்லா மொழிகளிலும் உரக்க  உச்சரிக்க வைத்தது.
கவிஞர்கள் எழுதிய  புரட்சிப் பாடல்களை
அலையாடி விளையாடிய குழந்தைகள்
கடல் தெருவெங்கும் வெண்கொடி ஏந்தி
எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் பாடிச் சென்றனர்.
குருதி குடித்த செங்கோலை எதிர்த்து
எழுதத் தொடங்கி இருந்தன எழுத்தாளர்களின்
பேனா முனைகளும் கணிப்பொறி எந்திரங்களும்.
இடிந்தகரையின் அலை தழுவிய நிலத்தில் இருந்து
மக்கள் மனத்தில் நம்பிக்கை ஒளி வீசத் தொடங்கியது.
அவ்வொளி கூடங்குளத்தில் ஒற்றுமையைச் மலரச் செய்து
உலகெங்கும் தன் கதிர்கள் வழியாக வெளிச்சத்தைப் பரப்பியது.
உலகம் உயிர் பெறத் தொடங்கியது.
இன்று நம் காடுகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
மீண்டும் அலையோடு விளையாடியும் கடல் மணலில்
பச்சைக் குதிரை தாண்டியும் விளையாடுகின்றன குழந்தைகள்.
பறவைகள் நீல வானத்தின் ஓசோன் காயங்களை ஆற்ற
மென்சிறகு கொண்டு சாமரம் வீசிப் பறந்து கொண்டிருக்கின்றன.
அனிச்சம் பூத்து அழகாய் இருக்கிறது நம் உலகம்.
செப்டம்பர் புரட்சிக்கு நன்றி சொல்வோம்.


No comments: