2.12.12

நின் குழல் சூடிய செவ்வந்தியும் புன்னகைத்துக் கொண்ட நம் காதலும்...

நெகிழ் மனத்துள் ஆழப் புதைந்து
வார்த்தைகளுக்குள்
சிக்கிக் கொண்டிருந்த
நம் காதலை
எப்படி மீட்பதென இருவரும்
தவித்தபடி நடந்து கொண்டிருந்தோம்.

தொட்டுப் பிடித்து
சிறகு விரித்து வானெங்கும்
பறந்து பறந்து
விளையாடித் திரிந்த 
சின்னஞ் சிறு குருவிகளைக் கண்டு
நம்மின் கனத்த மௌனம்
கணத்தில் சிதறி
நம் கண்களில் தத்தளிக்க
பதபதப்பில் தரையில் விழுந்தது
கதிர்காலைப் பொழுதில்
நின் குழல் சூடிய செவ்வந்தி.

அச்செவ்வந்திப் பொழுதில்
வார்த்தைகள் விடுத்து
மௌனங்கள் தவிர்த்து
புன்னகைத்துக் கொண்ட
நம் காதலைப் பற்றி
வெண்பூக்கள் மலர்ந்திருந்த
நெடுமரத்தின்
செம்மஞ்சள் இலையொன்று
புல்வெளியில் அமர்ந்தபடி
காற்றோடு பேசிக் கொண்டிருக்கிறதாம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...