5.2.15

மழையின் பெருந்தேடல் அறிந்தவன்.

மழையொடு திரியுமவனின் 
எல்லாப் பயணங்களும்  
சாகசங்கள் நிறைந்தவை.  
மழை பேசிச் சிரிக்கும் 
நிமிடங்களில் 
மழைத் துளிர் பறித்து 
மணமூட்டிகள் தூவி  
தேன் கலந்து அவன் தரும் 
தேநீரைக் குடிப்பதற்காகவேணும்
நீங்கள் அவனுடன் மழையில் 
நனைந்தாக வேண்டும்.
அத் தேநீர்ப் பொழுதில் 
நீங்கள் சுவைக்கும் 
மூன்றாவது மிடறிலிருந்து 
ஐந்தாவது மிடறுக்குள்ளாக
உங்கள் கையில் வைத்திருக்கும் 
வடிவான சீனக் கோப்பையின் 
இளஞ்சூட்டிலிருந்து 
அவன் மஞ்சள் வெயிலை 
கசிய விடுவான்.
அப்பொழுது 
அவன் மேல் யாவரும் 
மையல் கொள்வர்.
எல்லா இலைகளுக்கும் 
மழைப் பொழி சூத்திரம் 
சொல்லித் தரும் போது 
உறுதியாக நீங்கள் 
அவன் மேல் 
காதல் கொள்வீர்கள்.
சில்லிட்டுக் கிடக்கும்
சில மிடறுத் தேநீரில் 
காலத்தை உறையச் செய்து 
மழையின் மாயங்களை
அவன் சித்திரம் 
தீட்டத் தொடங்குவதற்கு 
முன்பாக அவனின் 
மெல்லிய நீண்ட 
மழை விரல்களைப் பற்றி
ஆரத்தழுவி அவனின்  
குளிரிதழில் முத்தமிடுங்கள்.
அவன் 
மழையின் பெருந்தேடல் அறிந்தவன். 

-சரவணன். 

No comments: