5.2.15

முத்தங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அவனுக்கு நீல நிறக் கண்கள்...

அவனின்
எந்தக் காதலியும் 
இதுவரை அவனை
முத்தமிட்டதே இல்லை.

அவனின்
பாலைவனக் காதலி
தன் முத்தங்களை
ஒரு மழைக் கணத்தில்
தர பத்திரப்படுத்தி
வைத்திருப்பதாகக்
கூறினாள்.

அவனின்
கடற்கரைக் காதலியோ
தன் முத்தங்களை
ஒரு நிலா இரவில்
உப்புக் கரிக்காத
காட்டருவியில்
குளித்தபடி
தருவதற்காய்
வைத்திருப்பதாகக்
கூறினாள்.

அவனின்
கானகக் காதலி
தன் முத்தங்களை
புயற் பொழுதில்
சமுத்திர வெளியில்
ஒரு பாய் மரப்
படகுப் பயணத்தில் தர
நினைத்திருப்பதாகக்
கூறினாள்.

இப்படியாக
அவனின் ஒவ்வொரு காதலியும்
தங்கள் முத்தங்களை
ஒரு கணத்திற்காக
பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.

இப்பொழுது அவனும்
தன்னைக் கண்டதும்
முத்தமிடும் ஒருத்திக்காய்
அவனின் முத்தங்களை
பத்திரப் படுத்தி
வைத்திருக்கிறான்.

அவன்
நீல நிறக் கண்களும்
கள்ளூறும் உதடுகளுமாக
எல்லா நிலத்தின்
வாசனையோடும்
திரிந்து கொண்டிருக்கிறான்.

- சரவணன்.

1 comment:

Yasmine Rahamathullah said...

Really superb. . First line -lerndhu kadaisi varai interesting a irukku... : )