20.5.15

நந்தன்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்.

அது ஒரு
மார்கழி மாலை.
குருவிகளும் கிளிகளும்
கூடடையும் நேரம்.

தெம்மாங்குப் பாட்டின்
தீராத தாளம் கேட்டபடி
சலசலத்து ஓடிக் கொண்டிருந்தன
வரப்போர வாய்க்கால்கள்.

மார் முட்டும் குழந்தையை
ஒரு கையில் அணைத்தபடி
மறு கையில் நாணலேந்தி
வருவது மருதம்மாள் தான்.
அவள் தான்
பாடிக் கொண்டும் வருகிறாள்.

தூரத்தில் ஒரு திருப்பத்தில்
தலை தெறிக்க ஓடி வரும்
பூமயிலைக் கண்ட பதட்டத்தில்
தெறித்து தானாய் நிற்கிறது
அவளின் தேன் தெம்மாங்கு.

அவள்
மென்மார் பற்றியிருந்த
குழந்தை அனிச்சையாய்
அவளின் கழுத்தை
இறுகப் பற்றிக் கொள்கிறது.

தெருவுக்குள்
துப்பாக்கி தோட்டாக்களின்
வெடிச் சத்தம் கேட்கிறது.

பூமயில் மருதம்மாளை
இழுத்துக் கொண்டு
புழுதி கிளம்பிய
வெண்மணியின் தெருவெங்கும்
ஓடுகிறாள்.

தெருவின் மூலையில்
திறந்தே கிடக்கிறது
ஒரு குடிசை.

எதையும் பூட்டி வைக்கத்
தெரியாத
உழவனின் குடிசை அது.

எட்டடி நீளமும்
ஐந்தடி அகலமும்
உள்ள அந்த
எளியவனின் குடிசைக்குள்
அவர்கள்
ஒளிந்து கொண்டனர் .

பற்றியெரிந்த
அந்திச் செவ்வானமும்
மிகுந்த பயத்துடன்
அவர்களுடன் ஒளிந்துகொண்டது.

வல்லாதிக்க வெறிக்கு
தப்பித்து வந்த
நிலமிசை உழவோர்க்கும் 
இன்னுமின்னுமாய்
சில எளியோர்க்கும் 
அந்தச் சின்னக் குடிசை
அடைக்கலம் கொடுத்தது.

சடுதியில்
அது சாதியின்
கோரத் தாண்டவம்
ஆடிய மேடையானது.

தோழர்களே தோழர்களே
ஒரு சாம்பல் புதனில்
பால் வீச்சம் தொலைத்து
கருகிய குருதி வீச்சத்தோடு
தலை குனிந்து
நின்ற வெண்மணியில்
விளைந்த நெல்மணிகளின்
விதைநெல் வேண்டும்.

எங்கே கிடைக்கும் தோழர்களே?

நந்தன்களுக்கு
வாக்கு கொடுத்திருக்கிறேன்.

1 comment:

வசந்தசெல்வன் said...

எதையும் பூட்டி வைக்கத்
தெரியாத
உழவனின் குடிசை அது!

நடை மிக அழகு!