17.7.10

மயிற்கொன்றை மரத்தினடியில் உனக்காகக் காத்திருந்தபோது...

விடியற் காலையிலிருந்து பெய்த மழை சற்று ஓய்ந்திருந்தது
ஒளி சிந்தி அசைந்தன பச்சை இலைகளும் வண்ணப்பூக்களும்
நெகிழ்ந்து இளகிக் கிடந்த மண்ணில் பெருக்கெடுத்த புனலாய்
மிகவும் களித்தோடிக்கொண்டிருந்தது நிறம் கொண்ட மழை நீர்
கூவிக்குதித்து கும்மாளமிட்ட குழந்தைகளின் ஆனந்தக்குதியலில்
வெண் முத்துக்களாய் தெறித்துச் சிதறி தூறின மழைக் குளங்கள்
அடை மழையில் நனைந்த கருங் குயிலொன்று நுணா மரத்தின்
நுனிக்கிளையில் அமர்ந்து அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தது
கிளிகளும் தாரிச்சிட்டுகளும் பட்டாம் பூச்சிகளும் கொக்குகளும்
நாரைகளும் வானம்பாடிகளும் சிறகு விரித்து பறந்து சென்றன
மேகத் திரைச் சீலைகள் ஒதுக்கி வாசல் திறந்தது நீல வானம்
நீயும் நானும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் மயிற்கொன்றை
மரத்தினடியில் உனக்காகக் காத்திருந்தபோது இலைகளோடு
அழகழகாய்ப் பூத்திருந்த மழைத்துளிகளை உதிர்த்தவாறு
இளங்காற்றில் வானவில்லை வரைந்தபடி வந்துகொண்டிருந்தாய்...

No comments: