9.9.11

தாமரைக் குளச் சலனங்கள்

மௌன மேகங்களைத் தழுவிக் கிடந்தது பூங்குளம்
வண்ணங்களைச் சுமந்தபடி திரிந்தன பட்டாம் பூச்சிகள் 
பாறைச் சிதறலொன்று கரையோர நாணற் புதரில்
ஒளியுமிழ்ந்தபடி வெறும் கல்லாகிக் கிடந்தது
முன் தினத்தின் மதியப் பொழுதில் விளையாடிய
சிறுவனின் குறி தவறிய கல்லாய்க் கூட இருக்கலாம்
நிலத்திலும் நீரிலும் ஞானம் தேடியலைந்த தவளைக்குத்
தியானம் செய்யப் போதுமானதாய் இருந்தது  அந்தக் கல்
தளும்பும் வட்ட வடிவ வாவியைக் கண்ணெடுத்து அளந்து
வரைந்தபடி வானில் பறந்து கொண்டிருந்தது சிற்றெழால்
பூக்களற்ற அல்லித் தண்டுகளில் நறவம் போல் வழிந்தன 
சிட்டுக்  குருவிகள் சேந்தி விளையாடிய அமுதத் திவலைகள்
கமல இலைகளில் முத்துச் சிதறலாய் உயிர்த் துளி மின்ன 
தாமரைக் குளத்தின் அழகியச் சலனங்கள் வழியாக
அமைதியடைகிறது சலனப்பட்ட சின்னஞ் சிறு  மனம்.

No comments: