17.10.11

மெல்லப் பூத்து என் விழி மலர்த்தும் வேலிப் பூக்கள்.

வெளிச்சம்
தீட்டிக் கொண்டிருந்த
அந்திச் சித்திரத்தைப்
பார்த்தபடி
முற்றத்தில் அமர்ந்திருந்தேன்.

கோழியும் குஞ்சுகளும்
தம் நகச் சீப்பு கொண்டு
நிலத்தின் தலை வாரிக்
கொண்டிருந்தன.

பொன் மஞ்சள்
பூக்களைக்
கொய்து வந்தது
இளந்தென்றல்.

வெளியெங்கும் பறந்து திரிந்து
பசும் பாகற் கொடி படர்ந்த
பனையோலை வேலியில்
அழகாய் அமர்ந்தன        
தேன் சிட்டுக் குருவிகள்.

மகிழ்ந்து கத்தி
ஞாலம் மறந்து
கோலம் கொஞ்சிப்
பல கதைகள் பேசி
மூக்குரசி மூக்குரசி
முத்தம் கொடுத்தன.

வெட்கம் மேவிய மென் பாகல் இலைகள்
பனை ஓலை நெஞ்சில் முகம் பதிக்க
ஏகாந்தப் பொழுதின் இனிமை கூட்ட
காற்றில் பாடத் தொடங்கின
வேலிப் பனை ஓலைகள்.

களி மிகுந்த இரவாகிப் போனது அன்று.

மறுநாள்
வேலி அணைந்திருந்த
வேரல் கழியேறி
எல் புலரக்
கூவியது 
பொன்னிறச் சேவல்.

வெளிச்சம் மலரும்
வைகறை வானத்தில்
ஒளியள்ளி முகங் கழுவி
காற்றுத் துண்டால் துடைத்தபடி
வாசலில் நின்றிருந்தேன்.

அக்கணத்தில்
பூ மொட்டுக்களின் காதில்
பாகற் கொடியின்
பச்சை இலைக் கலாபங்கள்
தவழும் சிறகசைத்துச்
சத்தமின்றிச் சொன்னது,
"புற்றிழந்த அரவமொன்று
அலைந்து ஊர்ந்து
தன் கொடி மடியில்
களைத்துப் படுத்திருப்பதாக"!

நல் அரவத்தின்
ஆழ் உறக்கம்
கலைக்காது 
மெல்லப்
பூக்கத் தொடங்கின
என்
விழி மலர்த்தும்
வேலிப் பூக்கள்.

1 comment:

நம்பிக்கைபாண்டியன் said...

கோழியும் குஞ்சுகளும்
தம் நகச் சீப்பு கொண்டு
நிலத்தின் தலை வாரிக்
கொண்டிருந்தன.

அழகான ரசனை, நல்லா எழுதுறீங்க, அந்த ரயில் மழை பற்றிய கவிதை இன்னும் அழகு!