2.8.08

மஞ்சள் நிறப் பூவும் புத்தரின் புன்னகையும்...

என் புத்தக அடுக்கில் தியானத்தில் இருந்த புத்தரின் புன்னகையைப் போல அந்த மஞ்சள் நிறப் பூ பூத்திருந்தது. அந்தப் பூவின் பெயர் என்னவென்று தெரியவில்லை. யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள மனமும் இல்லை. அதன் அழகில் லயித்திருந்தேன். அதன் மெல்லிய கோடுகளை என் கைகளால் தடவிப் பார்த்தேன்.

புத்தரைப் போலவே இந்தப் பூவும் என்னை வசீகரித்ததில் வியப்பொன்றும் இல்லை.

பூவில் புத்தரின் புன்னகை கண்ட அந்த புலர் காலை நேரத்தில் பூஞ் செடியினை அனைத்து இறுகப் பற்றியிருந்த மண்ணின் அடர் வண்ணத்தின் மேலே தேங்கியிருந்த தெளிந்த நீரில் தவழ்ந்து சென்றது வெண்மேகம்.

சின்னஞ் சிறு வயதில் தோளில் புத்தகப் பையை சுமந்து சென்ற நாட்களில் ராஜகுமாரனாகவும் இளவரசியாகவும் பிடரி மயிர் புரள விரையும் வெண் குதிரையாகவும் மந்திரவாதியாகவும் கிளியாகவும் அரக்கனாகவும் யானையாகவும் கதை சொல்லிய மேகங்கள் இன்று இந்த மஞ்சள் நிறப் பூவை ரசித்துக்கொண்டிருந்த பொழுதில் ஒரு புஷ்பக விமானத்தைப் போல தோன்றியது.

மங்கள தேவி மலையில் ஒரு வேப்பமரத்தடியில் நின்று கொண்டிருந்த கண்ணகியை அழைத்துச் சென்ற புஷ்பக விமானமாக கூட இது இருக்கலாம் என்ற நினைப்பில் வானத்தை நோக்கிய பொழுது அங்கே கையில் சிலம்புடன் நின்று கொண்டிருந்தாள் கண்ணகி, "மேகங்களில்".

நான் கதை சொல்லத் தொடங்கி விட்டேன். கேட்பதற்கு நீ இருக்கிறாய் அல்லவா?

No comments: