10.8.08

என் ஜன்னல் தோழி...

எப்பொழுதும் கத்தியே தன் மகிழ்ச்சியை
வெளிப்படுத்துவான் பக்கத்து வீட்டுச் சிறுவன்
அன்றும் மழை நின்றவுடன் கத்தியபடியே
மாடிப் படிகளில் ஓடிக் குதித்து இறங்கினான்.
தீபாவளி விடுமுறையின் முதல் நாளின்
அழகிய மாலை நேரம்,
என் ஜன்னல் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன் .
மழையின் ஈரம் ஏறி இருந்தது சுவர்.
வெடிக்கத் தொடங்கின தீபாவளிக் கொண்டாட்டங்கள்
வட்டமடித்து பயந்து சிறகை விரிக்கத் திணறி
வானவில்லின் குறுக்கும் நெடுக்குமாய் பறந்து
காணாமல் போனாள் என் ஜன்னல் தோழி.
கொண்டாட்டங்கள் அடங்கிய
வாணவேடிக்கைகள் இல்லாத
விடுமுறையின் கடைசி நாளின் பின்னிரவில்
நகரத்துப் பறவைகள்
கூட்டம் கூட்டமாக பறந்து சென்றன.
என் ஜன்னல் தோழி இன்னும் வரவில்லை...

No comments: