13.8.08

பெரு மழைக் காலத்தில் ஒரு வாகை மரத்தடியில்...

ஒரு இலையுதிர் காலத்தின் மஞ்சள் மாலைப் பொழுது...

பரந்து விரிந்து நிழல் பரப்பிய வாகை மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்து புதிய புதிய பாடல்கள் இசைத்தபடி தளிர் விடும் இலைகளை வரவேற்று பாடிக்கொண்டிருந்தது ஒரு கருங்குயில்...

மரத்தினடியில் இருந்த கல் இருக்கையில் நட்சத்திரம் இல்லா வானத்தின் பிறை நிலா போல அமர்ந்திருந்தேன்...

பொன்னால் மெழுகியது போன்று சருகுகள் உதிர்ந்து மரத்தினடியில் கிடந்தன.

தெற்கு நோக்கிச் செல்லும் விரைவு ரயில் , ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற பின்பும் தனது இசை மழையை தொடர்ந்து கொண்டிருந்தது அந்தக் கருங்குயில்...

ரயிலோசையும் குயிலோசையும் என்னை வேறு எதிலும் கவனம் செலுத்த விடவில்லை...

படிக்க எடுத்து வந்திருந்த பாரதியின் கவிதைகளை அதன் பக்கங்களை புரட்டிப் புரட்டி காற்று படித்துக் கொண்டிருந்தது...

நான் அதன் வாசக அனுபவத்தை தடை செய்ய விரும்பவில்லை...

ஊர்க்குருவிகள் கிளைகளெங்கும் நடந்து பறந்து விளையாடிக் கொண்டிருந்தன...

இரை தேடிச் சென்ற ஒரு காக்கை கூடடைய பறந்து வந்தது. அலகினால் கவ்வி வந்த இரைகளை அப்பா காக்கை அம்மா காக்கையிடம் கொடுக்க அம்மா காக்கை கூட்டில் இருந்த குஞ்சுக் காக்கைகளை கொஞ்சிக் கெஞ்சி உணவு கொடுத்தது...

பக்கத்துக் கிளையில் குடியிருந்த மைனாக்கள் தங்களது கூட்டை செப்பம் செய்து கொண்டிருந்தன...

மடியில் படுத்துறங்கும் குழந்தையை தலை கோதும் தாயைப் போல பசும் இலைகளால் சாமரம் வீசிக் கொண்டிருந்தது வாகை மரம்...

தாய்மையும் தோழமையும் நம்மிடம் மட்டும் இல்லை...

இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் உண்டு...

தொடர் பயணத்தில் இருந்த மழை மேகங்களிடம் காற்று நலம் விசாரித்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் சில்லென்று மழைத் துளிகள் என்னில் பட்டுத் தெறித்தது...

நனையத் தொடங்கினோம் ஒற்றை இருக்கையும் நானும்...

பெருங் குடையாய் கூடடைந்த பறவைகளை காத்து நிற்கிறது வாகை... அந்த மரத்திற்கு தான் இந்தப் பறவைகளிடத்து எவ்வளவு வாஞ்சை... மரத்திடம் தான் இந்தப் பறவைகளுக்கு எத்துனை நேசம்...

பெரு மழை பெய்யத் தொடங்கியது...

எனக்கான வண்டி தூரத்தில் புள்ளியாய் வந்து கொண்டிருந்தது...

மழை மண்ணை இன்னும் ஈரமிக்கதாக்கிக் கொண்டிருந்தது...

தாய்மையையும் தோழமையையும் போல...


No comments: