6.8.08

மணல் தொடும் அலையாய்...

மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள அந்த அழகிய கிராமத்தின் வயல் வெளிகளை ஒட்டியவாறு சிற்றோடையைப் போல நீண்டும் வளைந்தும் சென்ற ரயில் பாதையில் காது வைத்து ரயிலின் சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்த பள்ளிக்கூட சிறுவர்களை பார்த்தவுடன் எனது இளம் பருவத்து நினைவுகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின...

எவ்வளவு இனிமையான நாட்கள் அவை...

பள்ளி விட்டு வீடு திரும்புகையில் நண்பர்களுடன் மழையில் உடைப்பெடுத்து ஓடும் வாய்க்காலில் மீன் பிடித்து அதை பத்திரமாக ஒரு நெகிழிப்பையில் தண்ணீர் நிரப்பி வீட்டிற்கு கொண்டு வந்து கண்ணாடிக் குடுவையில் வளர்த்து அதற்கு உணவாக மண்புழு பிடித்து அதன் வளர்ச்சியை அழகை ரசித்து ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் பொழுது புத்தகப் பையை வைத்து விட்டு சிறிது நேரம் அந்த மீன்களுடன் அன்று பள்ளியில் நடந்த நிகழ்வுகளை அம்மா கொடுக்கும் நொறுக்குத் தீனிகளை தின்று கொண்டு காப்பி குடித்தவாறு கதைத்து கொண்டிருந்த காலங்கள் அதியற்புதமானவை...

அப்பா அன்று புதிதாக வாங்கி வந்த பென்சில் திருகையில் இருந்து பென்சிலை கூர்படுத்தும் பொழுது அழகிய வடிவில் வெளிவரும் மரச்சுருளை பத்திரப்படுத்திய நாட்கள் முதற்கொண்டு மயிலிறகு குட்டி போடும் என காத்திருந்த நாட்கள் வரை பால்யத்தின் சுவடுகள் இன்னும் நினைவலைகளாய் மனத்திற்குள் மணல் தொடும் அலையாய் வந்து போகின்றன...

இன்னும் எழுதுவேன் பால்யத்தின் பக்கங்களை...

காத்திருங்கள்...

No comments: