27.8.08

முழுவதுமாக...

அவன் அவனுக்கே அந்நியமானவன்
பெயர் தெரியாததால் அவனை
"பைத்தியம் " என்றார்கள்.
பிறந்தது முதல்
சுதந்திரமாகத்தான் உள்ளான்-அம்மா
யாரென்று அறியாததால் அம்மணமாய்!
ஆதரவாய் யாரும் வந்ததில்லை
"ஈக்களைத் தவிர "!
அதுவும் அவன் புண்களைத் தேடி!!!
கழிவுகள் அவனைக் கழுவின-அவன்
குப்பைத் தொட்டியைக்
குடிலாக்கிக் கொண்டான்.
தெருவைச் சுற்றுவதை
தொழிலாக்கிக் கொண்டான்.
கல்லடி படும் போதும்
வயிறு பசிக்கும் போதும்
மட்டுமே அவன் வாய் வலிக்கும்
"அவனுக்கே தெரியாமல்"!
அன்று இரவு சுதந்திரமானவன்
தூங்கப் போனான்.
அடுத்த நாள் அவன் எழவில்லை.
யாரோ சொன்னார்கள்
"பைத்தியம் செத்துவிட்டது" என்று!
அன்று தான் அவன் நகராட்சிக்குத்
தெரிந்தான் " பிணமாய்"
சுதந்திரமானவன் போர்த்தப் பட்டான்
முழுவதுமாக!