16.3.10

முகில் திரள் பொழுதில்...

பெருங் கடல் வெளியில்
முகில் திரள் பொழுதில்

வண்ணம்
கொண்டது
மணற் தீரம்...

நங்கூரமிட்ட
நாவாய்க்கலன்கள்
நர்த்தனம் ஆடிய
அலைவாய்க் கரையில்

*நித்திலம் பூக்க
சிப்பிச் செடிகள்
நீந்திக் கிடந்தன
திரை கடலெங்கும்...

குறுங்கால் நண்டுகள்
கோலமிட
அழகிய ஆமைகள்
ஓடு புக

கண்டங்கள் நடுங்க
அண்டங்கள் அதிர
வளி மண்டலம் கிழித்து
முழங்கின இடிகள்!

கைநொடிப் பொழுதில்
பேராழியில் மூழ்கிக் கிடந்த
சங்கினுள் புகுந்தது
அலையோசை...

திசைகளெங்கும்
மின்னல்கள் மின்ன
வானம் எழுந்தன
கடலலைகள்...

திரண்ட அலைகள்
கரை கடக்க

பெருமழை பெய்தது
கடற்புரத்தில்...

*(மேகம் திரளும் பொழுதுகளில் சிப்பிகள் (கிளிஞ்சல்கள்) கடல் அலையின் மேற்பகுதிக்கு வந்து காத்திருக்கும் . மூடியிருக்கும் கிளிஞ்சல்களுக்குள் மென்மையான ஆய்ஸ்டர் எனும் உயிரினம் இருக்கும். கிளிஞ்சல்கள் திறந்த நிலையில் முத்துச்சிப்பிகள் மழைத்துளிக்காகக் காத்திருக்க அதனுள் மழைத்துளி விழுந்த உடனேயே கிளிஞ்சல்கள் மூடிக் கொண்டு கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று விடும். அங்கு காதலில் விழுந்த மழைத்துளியும் ஆய்ஸ்டரும் கூடிக் களிக்க நித்திலச் சிரிப்போடு முத்துப் பெண் பிறக்கிறாள். பின் நங்கையர் கழுத்தில் நகைக்கிறாள்.)


No comments: