7.4.10

காடுகள் நிறைந்த மனம்...

தரு நிறை வனத்துள்
தளும்பிச் சுழித்து
நெகிழ்ந்தோடுகிறது
வெண்துகில் ஓடை

தத்தி தவழ்ந்து
சிறகு குவித்து
மோனத் தவம் புரிகின்றன
தட்டாரப் பூச்சிகள்

முதுகு நாணி
முன்னங்கால்கள் தூக்கி
சிலையென சமைந்து நிற்கிறது
பாறையில் பச்சைத் தவளை

விழியிரண்டால்
பெரு வெளி வியந்து
பேரணியாய் விரைகின்றன
கணுக்கால் எறும்புகள்

நறுமலர் தேடி நறவம் எடுத்து
களிநடம் புரியும் தேனீக்களின்
பூந்துகள் தூதில்
சூல் கொள்ளும் பூக்கள்
மலர்ந்து சிரிக்கின்றன

காடெங்கும் வேழம் முறித்த
மூங்கிலின் பச்சை வாசனை
ரீங்காரமிட்டு களிற்றினைப்
பின்தொடர்கின்றன நுளம்புகள்

உயிர்கள் நிறைந்த அற்புதக்கூட்டில்
வெளிச்சம் சிந்தி
பயணம் போகிறது
காடுகள் நிறைந்த மனம்...

No comments: