29.4.10

சித்திரை மழை...

செந்தளிர் இலைகள் துளிர்த்த வேம்பில்
மலர்ந்து சிரித்தன கவின் வெண் பூக்கள்

அணில்கள் விளையாடும் மரக்கிளையூடி
ஒளிர்ந்து விரிந்தன வைகறைக் கதிர்கள்

புங்கை மரத்தின் சிறுகிளை மீதில் சிறகுகள்
பரத்தி சிலிர்த்து அமர்ந்தது செம்பூத்தொன்று

நனிமகிழ்ந்து பறந்து முள் மரங்கள் தோறும்
கூத்தாடித் திரிந்தன தூக்கணாங்குருவிகள்.

நீர்நிறை குளத்தில் துள்ளிய கெண்டைகளின்
ஆடல் கண்டு தாழத் தவழ்ந்தது கூழைக்கடா

நெடுங்கால் பதித்து நீள் வண்ண அலகால்
கயலினைத் தின்றன வலசைப்பறவைகள்.

சித்திரை வெயிலில் மழைக்கதை கதைத்து
மழைச்சித்திரம் வரைந்தன எழில் முகில்கள்.

No comments: