16.5.10

அம்மாவென்றழைக்கிறது மழலை...

நெடுந்தொலைவு பயணித்து நீர்க்குளத்தில் இறங்கி
ஆயிரத்தில் மூன்று சதமாய் விதையொன்று துளிர்க்க
கொடி வழியே சுவாசித்து அரும்பிப் பூக்கிறது உயிர்ப் பூ
மெல்லுடல் விரித்து அலையென அசைகிறது பேரழகு
நாளங்கள் தாரங்கள் இசையில் உயிர் நீர் பெருக்கெடுக்க
தாளம் தட்டத் தொடங்குகிறது செந்தாமரை இதயம்
குமிழ் பவழ இதழொடு இரு செவியும் நாசியும் தோன்ற
முகையவிழா சிறு மொட்டென குவளைக்கண் பூக்கள் மலர
செம்பிஞ்சுக் கை கொண்டு வாழைத்தண்டுக் கால் கொண்டு
அன்பின் குழைவில் அம்மாவென்றழைக்கிறது மழலை
மேடிட்ட வயிற்றில் மெதுவாய் கை தொட்டு மெய் சிலிர்த்து
நெகிழ்ந்து மகிழ் உணர்வில் பேரின்பம் அடைகிறது தாய்மை.

No comments: