9.9.10

யாரேனும் மொழி பெயர்த்து வையுங்கள்.

பெருகி ஓடும்
நதியின்

கரையில்
அமர்ந்து

பழுத்த இலையொன்று
பசுங்கிளையில்
வாழ்ந்திருந்த நாட்களைப்பற்றி
காற்றில் எழுதிய
எழுதி முடிக்கப்படாத
குறிப்புகளை
மொழி பெயர்த்துக்
கொண்டிருக்கிறேன்

மலர்க் கண்கள்
திறந்து

பூஞ்செடிகள் துயில்
எழும்

முகை விரிப் பொழுது
நிறங்களால்
விடியும்

அப்பொழுது
என்

இலைச் சிப்பிகளில்
பனி முத்துப்பூக்கள்
பூத்திருக்கும்
கமழ்ந்த வாசனையில்
கிறு கிறுத்த
இளங்காற்று
வண்ணத்துப்பூச்சியாய்
மாறி
சிறகசைத்துப்
பறந்து
ஆடிக் கூத்தாடி
விளையாடிக் களித்திருக்கும்
கிளையமரும்
கருங்குயில்

காதல் பாடல்
பாடும்

சிறு குருவி
கூடு கட்டி
வாழும்

மலை முகடுகளில்
இரவில் தங்கியிருந்த
முகில்கள்
கொக்குகளோடும்
நாரைகளோடும்

பயணம் செய்து
மழையாய் பொழிந்து
உயிர் சிலிர்க்க
உடல் நனைக்கும்.
--------------------------------
--------------------------------
----------------------------------
---------------------------------
குறிப்பு

பழுத்த இலை
எழுதி வைத்திருக்கும்
மிச்சக் குறிப்புகள்
காணக் கிடைத்தால்
நான்
இல்லாமல் போனாலும்
யாரேனும்
மொழி பெயர்த்து வையுங்கள்.