எப்பொழுதும் ஜன்னலுக்கு
எதிரேயுள்ள திண்டில் தான்
குருவிகளுக்கும் காக்கைகளுக்கும்
அம்மா தண்ணீர் வைப்பாள்.
காக்கைகளும் குருவிகளும்
பறந்து விளையாடிய களைப்பில்
தண்ணீர் குடித்துச் செல்லும்.
சில சமயங்களில் பெயர் தெரியாத
பறவைகளும் வந்து போகும்.
ஜன்னல் வழியாக
ஓடியும் நடந்தும்
வம்பிழுத்துக் கொண்டே
இருப்பாள் காற்று.
அவ்வப் பொழுது
வாசனைகளை
பரிசளித்துச் செல்வாள்.
வித விதமாய் கதை சொல்லிப்
போகும் வெண் மேகங்கள்.
அமைதியான மதியங்களில்
கருவேப்பிலை மரத்திலமர்ந்து
குயில் பாடிக் கொண்டிருக்கும்.
மழைக் காலங்களில்
முகத்தில் தெறிக்கும்
சாரலில் நனைந்து கொண்டே
மேசையில் இருக்கும்
புத்தனும் நானும்
மழையை ரசிப்போம்.
இரவில் மேகமும் நிலவும்
கண்ணாமூச்சி விளையாடும்
பொழுதுகளில் மெல்லிசையைக்
கேட்டபடி உறங்கிப் போவேன்.
அதிகாலையில் கிழக்கிலிருந்து
பூக்களையெல்லாம் மலர்த்திவிட்டு
ஜன்னல் வழியாக என்னையும்
எழுப்பி விடுவான் இளம்பரிதி.
மரச் சட்டங்களும்
நீளக் கம்பிகளுமாய்
அழகாக இருக்கும்.
எங்கள் வீட்டு ஜன்னல்.
No comments:
Post a Comment