3.6.16

அலையெழும் சிறு குளம் நின்ற வெண்முளறி...

காலத் தூசு படிந்து 
மூலையில் கிடந்தது 
ஒரு யவனச் சித்திரம். 
அப்பழஞ் சித்திரத்தில் 
கண்கள் செருகி
கிறங்கி நோக்குகிறாள்
ஒரு கிரேக்கத்துப் பேரழகி.
தாளமிசைத்து மகிழ்ந்த
விரல்கள் போல
ஒய்யாரமாய் அவள்
சிற்றிடை மேவிப்
பூத்திருந்தன மூன்று
மென்தண்டுத் தளிர் விரல்கள்.
சில பாகை சாய்ந்த வலக்கையில்
வடிவான ஒரு மதுக் கிண்ணம்.
இடை பூத்த விரலொன்றில்
மலரொன்றும் மலர்ந்திருந்தது.
உற்று நோக்குகையில்
அலையெழும் சிறு குளம் நின்ற
வெண்முளறியைப் போல இருந்தது
வரைந்து முடிக்கப் படாத
அந்த யவன தேவியின் சித்திரம்.

-சரவணன்.  

No comments: